Sunday, June 16, 2013

தாத்தாவின் சுண்டு விரல் ....!


நடைபயிலும்  காலத்தில்
எனக்கு சொந்தமானது ...என்
தாத்தாவின் சுண்டு விரல் ...!

புத்தருக்கு போதி மரம் ..,
எனக்கு ...........என்
தாத்தாவின் சுண்டு விரல் ...!

அவிழும் காற்சட்டையை
இடது கையால் பிடித்துக் கொண்டு ...
வலது கையால் ...
தாத்தாவின் சுண்டு விரலை
பற்றிக் கொண்டு நடக்கையில்
திருவிழாவில் தேர் போவது மாதிரி ...!

அவரின் ...
கோபம்  ..சாந்தம் ..
சிரிப்பு ...அழுகை ..
என்னுள்ளும் இப்போது ...!
அவரின் சிரிப்பு...
சுற்றி இருப்பவர்களை ...சந்தோஷப்படுத்தும் .
காயப்பட்டவர்களை...குணப்படுத்தும் ...!

அப்பத்தாவை
அந்த வயதிலும் ...
"கண்ணம்மா ...இன்னைக்கு
களையாய் இருக்கேடி "என
கண்ணடித்துச்  சொல்லி சிரிப்பார் ..,
இவரின் கேலி கண்டு
அப்பத்தாவின் முகம் சிவப்புச் சாயம்
பூசியபடியே இருக்கும் ...!

எதற்கும் கலங்கா மனம் ...கதறியது ...
அப்பத்தா இறந்த போது ...
எனை மடியிலமர்த்தி
துண்டால் முகம் பொத்தி
கோ ..வென அழுத காட்சி
இன்னும் என் மனக் கண்ணில் ...!

அவர்கள் வாழ்ந்த
அன்பின் வெளிப்பாடுதான்
அந்த அழுகையென
பிற்பாடு எனக்குப் புரிந்தது ...!

ஜனனத்துக்கும் ...
மரணத்துக்கும் ..
மயானத்துக்கும் கூட ..
அழைத்துச் செல்வார் ...எனை !
வருவதும் ..போவதும் நிஜம் ..
நிரந்தரமில்லை ...மனித வாழ்வு
சொல்லாமல் சொல்வார்...!

நான்
மனம் கலங்கி ...
மதி மயங்கி நிற்கையிலே ..
என் சுண்டு விரலை
யாரோ பற்றுவது போல ..
திரும்பி பார்த்தால் ....
சிரித்தபடி ....என் தாத்தா ...
அரூபமாக ...
நான் இருக்கேன் ,,என்பது போல ...!

No comments:

Post a Comment