"கதம்பம்"
Monday, February 24, 2014
Sunday, June 16, 2013
தாத்தாவின் சுண்டு விரல் ....!
நடைபயிலும் காலத்தில்
எனக்கு சொந்தமானது ...என்
தாத்தாவின் சுண்டு விரல் ...!
புத்தருக்கு போதி மரம் ..,
எனக்கு ...........என்
தாத்தாவின் சுண்டு விரல் ...!
அவிழும் காற்சட்டையை
இடது கையால் பிடித்துக் கொண்டு ...
வலது கையால் ...
தாத்தாவின் சுண்டு விரலை
பற்றிக் கொண்டு நடக்கையில்
திருவிழாவில் தேர் போவது மாதிரி ...!
அவரின் ...
கோபம் ..சாந்தம் ..
சிரிப்பு ...அழுகை ..
என்னுள்ளும் இப்போது ...!
அவரின் சிரிப்பு...
சுற்றி இருப்பவர்களை ...சந்தோஷப்படுத்தும் .
காயப்பட்டவர்களை...குணப்படுத்தும் ...!
அப்பத்தாவை
அந்த வயதிலும் ...
"கண்ணம்மா ...இன்னைக்கு
களையாய் இருக்கேடி "என
கண்ணடித்துச் சொல்லி சிரிப்பார் ..,
இவரின் கேலி கண்டு
அப்பத்தாவின் முகம் சிவப்புச் சாயம்
பூசியபடியே இருக்கும் ...!
எதற்கும் கலங்கா மனம் ...கதறியது ...
அப்பத்தா இறந்த போது ...
எனை மடியிலமர்த்தி
துண்டால் முகம் பொத்தி
கோ ..வென அழுத காட்சி
இன்னும் என் மனக் கண்ணில் ...!
அவர்கள் வாழ்ந்த
அன்பின் வெளிப்பாடுதான்
அந்த அழுகையென
பிற்பாடு எனக்குப் புரிந்தது ...!
ஜனனத்துக்கும் ...
மரணத்துக்கும் ..
மயானத்துக்கும் கூட ..
அழைத்துச் செல்வார் ...எனை !
வருவதும் ..போவதும் நிஜம் ..
நிரந்தரமில்லை ...மனித வாழ்வு
சொல்லாமல் சொல்வார்...!
நான்
மனம் கலங்கி ...
மதி மயங்கி நிற்கையிலே ..
என் சுண்டு விரலை
யாரோ பற்றுவது போல ..
திரும்பி பார்த்தால் ....
சிரித்தபடி ....என் தாத்தா ...
அரூபமாக ...
நான் இருக்கேன் ,,என்பது போல ...!
Thursday, January 12, 2012
இதுதான் காதலா....?
நீ பார்த்த பார்வை
திசை மாறிப் போனதே ...!
பேசிய வார்த்தைகள்
தடம் மாறிப் போனதே ...!
என்னாசைக் கனவுகள்
ஓடும் நீரோடு போனதே ...!
உன்னோடென் வாழ்வு
கனவாகிப் போனேதே ...!
நீ தொட்ட மேனி
கனலாய் ஆனதே...!
உனைக் கண்ட என் விழிகள்
குருடாய் ஆனதே ...!
உன் தடம் பார்த்த பாதங்கள்
புண்ணாகிப் போனதே...!
யார் கொடுத்த சாபம்
நிஜமாய் ஆனதே ...!
நான் கொண்ட ஆசைகள்
கணிமரமாய் நின்றதே...!
விதி வந்து ஆசையை
வேரோடு சாய்த்ததே ...!
வேறொருவனை நினைக்க
இனி மனம் இடம் தருமோ ...!
நீயென்ன குற்றம் செய்தாய்
என மனம் ஆறுதல் கூறுமோ ...!
காலங்கள் எனைத் தேற்றுமோ ...
ஆசைகள் மீண்டும் துளிர் விடுமோ ...!
பொருளில்லா இடத்தில்
நல் பெண்மையில்லையா ...!
புரிந்து கொண்டு நடப்பர்
உலகில் யாருமில்லையா ...!
Friday, December 16, 2011
எழுந்து வா ...!
ஒரு தீக்குச்சியின் வெப்பத்திலே
கனலாகும் உலகமிது ...!
காற்றை சுவாசிக்க மறந்தாலே
மடிந்து போகும் உடலிது ...!
தூக்கமும் ஒரு வகை மரணம்தான் ,
எழுந்தால்தான் நம்பும்
இவ்வுலகம் ...நீ
இறக்கவில்லையென்று ...!
விதையின் வேலை
வேர் விடுவது ..விருட்சமாவது .!
பிறப்பின் சூட்சமம்
வாழ்வது ...வாழ்ந்து காட்டுவது ...!
உன் பார்வையில்தான்
கனல் கக்கும் சூரியனும்
குளுமை தரும் நிலாவும் .
வாழ்வின் சூட்சமும் இதுவே ...
துன்பமும் ...இன்பமும் !
துன்பமின்றி ...இன்பம்
எப்போதும் ..எங்கேயும் இல்லை ...!
எழுந்து வா......
இன்னும் அதிக துன்பப்படுவோம் ....
துன்பத்திலே ....
இன்பம் காண்போம் ...!
இப்படிக்கு மனசாட்சி ...!
எத்தனை முறைதான் ...எனை
அடகு வைப்பாய் ...!
நானில்லாமல் ...உன்னால்
நல்லதெது ...
தீயதெது ...
பகுத்தறிய முடியுமா ...நீ
நல்லவனாவதும்
தீயவனாவதும் என்னாலல்லவா ...!
எனைத் துறந்து ...
எதை சாதிக்கப் போகிறாய் ...
சாதிக்கத்தான் முடியுமா...?
செல்லும் பாதை ...
தீயதெனில் ..
திசை திருப்பி விடுபவன்
நானல்லவா ...!
விதையின்றி ...செடியா ...
நானின்றி நீயா ...!
உன் சுய மரியாதை ...
நானல்லவா ....!
இழந்தால் ...
நீ ...நீயல்லவே...!
மனிதனாவதும் ...
"மா"மனிதனாவதும்
என்னாலல்லவா ...!
நானுடனிருந்தால்
"நீதிபதி" நீ..யல்லவா ...!
இல்லையெனில் ...நீ வெறும்
"சாட்சி"..தான் ...!
வெற்றி ...!
பத்துப் பங்களா ...
பறக்கும் கார்கள் ...
பணிவிடை ஆட்கள் ...
பலகோடிப் பணம் ...
வெற்றியா ..?
சந்தோசத்தை தொலைத்து விட்டு
சான்ட்ரோ காரில் சென்றால்
வெற்றியா ..?
நித்தம் ...
உனைக் கண்டதும்
பிள்ளைகளின் முகத்தில்
தோன்றும் புன்னகை ....வெற்றி ,
வீட்டினுள் நுழைந்ததும் .
கட்டியவள் காட்டும் பரிவு ...வெற்றி .
பசியென்று வந்தோர்க்கு
உணவிட்டு அனுப்பினால் ...வெற்றி .
"இவன் என் மகன் ".என
பெற்றோர்கள் மனம் குளிர்ந்தால் ...வெற்றி .
எல்லாவற்றுக்கும் மேலாக ...
நீ
நிம்மதியாக தூங்கி எழுந்தால்
அதுவே உண்மையான வெற்றி ..!
மல்லிகாவின் திருமணம் --சிறுகதை
" மச்சானாப் பாத்திங்களா ..." பாட்டு சப்தத்தோடு ..கல்யாண மண்டபம் களை கட்ட தொடங்கியது ...!விடிந்தால் திருமணம் ...எல்லோரும் ஆளுக்கொரு வேலையை கையில் எடுத்துக் கொண்டு பம்பரமாய் சுழல ..பெண்ணின் தந்தை கனகசபை மட்டும் இறுக்கமாக ..மனதில் மகிழ்ச்சியின்றி எதையோ சிந்தித்த வண்ணம் அமர்ந்திதிருந்தார்...!
மல்லிகா,அழகானவள் , ..திறமையுள்ளவள் . தன் ஒரே மகளை பணக்கார இடத்தில்தான் முடிக்க வேண்டும் என்ற ஆசையில் ...பக்கத்து ஊரில் டாக்டராக பணிபுரியும் சுதாகர் கிடைத்தார் ..சுதாகர் அம்மா பிள்ளை ..!மாப்பிள்ளை பார்க்க போனபோது ..சுதாகரின் அம்மா "என் மகனுக்கு மாவட்டக் கலெக்டர்வீட்டுல பொண்ணு கொடுக்க தயாரா இருக்காங்க ..அவுங்க கொடுக்குற வரதட்சனையை ..நீங்க கொடுக்கத் தயாரா இருந்தா நாங்க உங்க பெண்ணை என் பயனுக்கு கட்டிக்கிறோம் "என்று சொல்ல , கனசபையோ .." எனக்கு ஒரே பொண்ணு ..அவளுக்காக எதையும் செய்வேன் ..நீங்க கேட்ட எல்லா வரதட்சனையும் கொடுத்துடுறேன் ' எனச் சொல்லி ..சம்மதம் பேசி வந்து விட்டார் ..! அம்மாவும் பொன்னும் "இது ரொம்ப பெரிய இடம் ..அவுங்க கேட்ட வரதட்சணை கொடுக்க முடியாது " என எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள் ..அதட்டி வாயடைத்து விட்டார்...!
மாப்பிள்ளை வீட்டார் கேட்ட எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டார் ..ஒன்றே ஒன்றைத்தவிர ..கார் ..எங்கெல்லாமோ அலைந்தார் பணம் கிடைக்கவில்லை ..விடிந்தால் கல்யாணம் ..என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கிப்போய் அமர்ந்தித்ருக்கிறார் ...சுவரோடு சாய்ந்து ..!
************************************************************************************************
"கடைசியில் பணக்கார புத்தியை காண்பித்து விட்டானே ..என் மகனுக்கு என்ன குறைச்சல் ..பணம் இல்லை.. மத்ததில் அந்த டாக்டர விட ஆயிரம் மடங்கு உசத்தி ." அடுப்படியில் சமையல் செய்து கொண்டே புலம்பிக் கொண்டிருந்தாள் வேதவள்ளி ...கனசபையின் ஒன்றுவிட்ட தங்கை .,கதிரவனின் அம்மா..!
"அம்மா புலம்புரத நிப்பாட்டு, ..பெத்தவங்களுக்கு தெரியாதா ..யார் யாருக்கு எங்கேன்னு இருக்கோ அங்கேதான் அமையும் "
"அது சரிடா ..அவ்வளவு பணத்துக்கு எங்கேடா போவான் ..அதுவும் காரு வேற வாங்கனும்மாம்ல .."
"ஆமம்மா ..இந்தக் கல்யாணத்தில மல்லிகாவுக்கும் ..அத்தைக்கும் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை ..மாமாவின் பிடிவாதக் குணத்துக்கு முன் அவர்களின் வாதம் செல்லுபடியாகவில்லை "
"அடப்பாவமே ..ம்ம் ..மல்லிகா நம்ம வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்துவான்னு நினைச்சேன் ...:புலம்பிக்கொண்டே ...சமையலில் ..மும்மரமானாள் .
**********************************************************************************************
கல்யாண மண்டபம் களை கட்டத் தொடங்கி இருந்தது ..உறவினர்கள் வருகையால் மண்டபம் நிரம்பி வழிந்தது ..மாப்பிள்ளை வீட்டாரும் வந்தாயிற்று.....! கனகசபை ..மெதுவாக மாப்பிள்ளை அறையை தட்டினார் ..
"வாங்க சம்பந்தி.. உள்ளே வாங்க ....என்ன .முகம் ஒரு மாதிரி இருக்கு ..நாங்க கேட்டது எல்லாம் ரெடிதானே?
"எல்லாம் ரெடிதான் சம்பந்தி ..ஆனா ..காரு...ஒரு மூணு மாசம் டைம் கொடுங்க கண்டிப்பா வாங்கி கொடுத்துடுறேன் .."
"என்னது காரு இப்போ இல்லையா ..அன்னைக்கு எல்லாம் ரெடின்னு சொன்னிங்களே ..மண்டபத்துக்கு வந்துட்டா கல்யாணம் எப்படியும் நடந்துரும்னு நினைப்பா ..இங்கே கார் நிக்காம எம்மகன் உம் பொண்ணு கழுத்துல தாலி காட்டமாட்டான் .."
"இல்லை சம்பந்தி ..அப்படியெல்லாம் சொல்லாதிங்க ..என் மானமும் என் பொண்ணு வாழ்க்கையும் ..உங்க கையில்தான் இருக்கு சம்மந்தி ..உங்க காலைப் புடுச்சு ..."
"அதெல்லாம் முடியாது ..டேய் ..எல்லோரும் கிளம்புங்க .."கிளப்பினார் .
சப்தம் கேட்டு கூட்டம் கூடியது ..
கதிரவன் செய்தி அறிந்து வேகமாக வந்து ..மாப்பிள்ளையிடமும் ,சம்மந்தியிடமும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் ..ம்ஹூம் ..! இவற்றை எல்லாம் பார்த்து..கேட்டுக் கொண்டிருந்த மல்லிகா வேகமாக வந்தாள் ..நேராக மாப்பிள்ளையின் அப்பாவை பார்த்து . ." எங்க அப்பா காரு வாங்கி கொடுக்க மாட்டார் ..யாரு காரு வாங்கிக் கொடுக்குரான்களோ ..அங்கே போய் உங்க மகனை தாலி கட்டச் சொல்லுங்க ....இதுக்கு மேல எதுவும் பேசாதிக ..அப்புறம் வரதட்சணை கேட்டாகன்னு போலீசில் கம்ளைன்ட் கொடுத்துருவேன் " என்று சொன்னதும் மாப்பிள்ளைக் கூட்டம் கிளம்பியது ..!வந்திருந்த உறவினர்களைப் பார்த்து .."யாரும் திரும்பி போக வேண்டாம் .. என் கல்யாணம் நடக்கும்... இதே முகர்த்தத்தில் ..இருந்து ஆசிர்வதித்திட்டு செல்லுங்கள் ...."அப்பாவின் பக்கம் திரும்பி ..
"அப்பா ..கல்யாணம்கிறது எவ்வளவு உன்னதமான விசையம் .. இரண்டு ஜீவன்களின் வாழ்க்கை ..!வரதட்சணை என்ற பெயரில் பணப்பரிமாற்றம் செய்ய இது தொழில் இல்ல.. அப்பா..உங்க வரட்டுக் கவுரவத்தாலே என்ன நடந்ததுன்னு பாத்திகள ..பெத்த பொண்ணு கிட்ட மாப்பிள்ளை பிடிச்சுருக்கா ன்னு ..கேட்டிகளா ..அவளிடம் கேட்கணும்னு ஏன் பெத்தவங்களுக்கு தோன மாட்டேங்குது ,..பெத்த பொண்ணு நம்மை பேச்ச மீற மாட்டா என்ற நம்பிக்கை ..ஆமாம் ..நாங்க மீற மாட்டோம் ..எங்களுக்கு பிடிக்குதோ ..பிடிக்கலையோ ..நீங்க சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டி காலம் முழுவதும் வாழுறோமே ..எதுக்காக ..பொம்பளப் புள்ளன்னு தெரிஞ்சும் கள்ளிப்பாலை கொடுக்காம ..எங்களை சீராட்டி ..பாராட்டி வளர்த்திகளே அதுக்காக ..!
பெத்தவங்க நினைக்கிறிங்க ..பணக்கார வீட்டு மாப்பிள்ளைன்னா பொண்ணு சந்தோசமா இருப்பான்னு ..பணம் முக்கியமில்லை ...ஐம்பது ரூபா கொண்டுவந்து அன்பா கொடுத்தா அதிலையும் குடும்பம் நடத்துறவதான் பொம்பள ..இது உங்களைப்போல அப்பாவுகளுக்கு புரிய மாட்டேங்குது ..!
வரதட்சணை ஒழியனும் ..ஒழியனும்னு வாய் கிழிய கத்தினா மட்டும் போதுமா..உங்களைப் போல பணக்காரன்களே இப்படி அள்ளிக் கொடுத்தா ..வரதட்சணை எப்படி ஒழியும் ..நான் என்ன குருடா ..செவிடா .,அங்கம் ஏதும் ஊனமா ..படிப்பு இல்லையா ..அழகுதான் இல்லையா ..?வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ண இந்தக் கால இளஞர்கள் ரெடியாகத்தான் இருக்குறார்கள் ...ஆனா நீங்கதான் குடுக்குறதை நிப்பாட்ட மாட்டேன்குரிங்க ..!
இதோ நிக்கிறாரே ..கதிரவன் ..இவருக்கு என்னப்பா குறை ..பணம் இல்லை ..அதைத்தவிர அந்த டாக்டரை விட ஆயிரம் மடங்கு நல்லவர் .உங்கள எது தடுத்தது ..வரட்டுக் கவுரவம் ..பணக்கார வீட்டு சம்பந்தம் வச்சுருக்கேன்னு சந்தோசப்பட்டு..நாலு பேருகிட்ட சொல்லிக்கலாம் .அதுதானே...வாழப்போற எங்க சந்தோசம் முக்கியமா..உங்க சந்தோசம் முக்கியமா..? ..முன்னே மாதிரி இல்லப்பா ..கழுத்துல தாலியை வாங்கிக்கிட்டு ..காலம் பூரா காயப்பட்டு வாழ நாங்க தயாரா இல்லை ..பணத்தை பொண்ணுக விரும்புறது இல்லப்பா ..பிறந்த வீட்டுல உள்ள எல்லாத்தையும் மறந்து ..புகுந்த வீட்டுல ஒரு அரவணைப்பு ..அன்பு .பாசம் கிடைக்கலைன்னா ..நீங்க கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் வீண்தான் அப்பா ..என்ன இவ்வளவு பேசுறாளே பொண்ணு ன்னு யாரும் நினைக்கவேண்டாம் ..பேச வேண்டிய நேரத்துல பேசாம இருக்குறதால்தான் பெண்ணுக்கு பிரச்சனையே பேசணும் ..பேசவேண்டிய நேரத்துல பேசியே ஆகணும் .."
எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரிக்க ..கனகசபை ..மகிழ்ச்சி ததும்ப ..கதிரவனின் கரம் பற்ற ....
வந்திருந்த அனைவரும் ..மலர்தூவி வாழ்த்த ..மல்லிகா-கதிரவன் திருமணம் இனிதே நடந்தது ..! என்ன கிளம்பிட்டிங்க ..இருந்து சாப்பிட்டுத்தான் போகணும் எல்லோரும் ...சுபம் .
குறிப்பு --இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே ..!