Monday, July 19, 2010
ஊரு போய்ச் சேரனும்....!
உச்சி வெயிலு வரதுக்குள்ள
ஊரு போய்ச் சேரனும்..!
மாராப்புச் சேலையை
தலையில் சுருட்டி,
கண்டாங்கி சேலையை
இடுப்பில் சொருகி ,
வெட்டிவைத்த விறகுக்கட்டை
தலையில் ஏற்றினாள்...!
காவக்காரன் வருவதற்குள்
போயிடனும் ....இல்லன்னா
சண்டாளான்...கண்ட இடத்தில்
பூரான் பார்வை பார்ப்பான் ...!
உச்சி வெயிலு வரதுக்குள்ள
ஊரு போய்ச் சேரனும்..!
பள்ளிக்குப் போறபுள்ள
அதிசயமா அரிசி சோறு
வேணுமின்னு அழுறான் ,
கேப்பக்கூலும்,கம்மங்கஞ்சியும்
வாழ்க்கையாய் ஆன எங்களுக்கு
அரிசி சோறு ஆகாயா தூரம்தான்...!
அடுத்த வீட்டுக்காரிட்ட விறக வித்தா ,
அஞ்சு ரூபா கொடுப்பாக...
ஆசைப்பட்ட புள்ளைக்கு
அரிசி சோறு போடனும்...!
உச்சி வெயிலு வரதுக்குள்ள
ஊரு போய்ச் சேரனும்..!
கட்டினவன்,
காலையிலயே
கள்ளக்குடிச்சு ...
எங்கே கிடக்கிறானோ..
எவ வீட்டு முன்னாடி தூங்குறானோ...!
ஆத்தா ..சொன்னா ...
"அழகா இருக்கான்னு
அவசரப்படாதிடி "ன்னு..
ம் ....அனுபவிக்கிறேன் ...!
அடி பொண்ணுகளா ...
உழைக்கிறவந்தான் ஆம்பளை ...
அழகெல்லாம் அப்புறம்தான்....!
உச்சி வெயிலு வரதுக்குள்ள
ஊரு போய்ச் சேரனும்..!
ஆசைபப்பட்ட புள்ளைக்கு
அரிசி சோறு சமைச்சு போடனும்...!
******************
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment